திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். முதல்-தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தீ பரவியதால் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறியபோதும், சிலர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் விவரம்:
மணிமுருகன் (30)
மாரியம்மாள் (50)
சுருளி (50)
சுப்புலட்சுமி (45)
ராஜசேகர் (36)
கோபிகா (6)
இவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், நிவாரண உதவிகள் அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் நிவாரண அறிவிப்பு:
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம்
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ₹1 லட்சம்
லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000
தீ விபத்தில் காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.