வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து, இன்று (27.11.2024) மாலைக்குள் புயலாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த புயல் சின்னம் நாகையில் இருந்து தென் கிழக்கு திசையில் 370 கி.மீ,
புதுவையில் இருந்து தென் கிழக்கு திசையில் 470 கி.மீ,
சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கில் 670 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதன் தாக்கம் காரணமாக, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பாலூரில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான கட்டடம், பழமை மற்றும் உறுதித் தன்மை குறைவால் நீண்ட காலமாக இடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இந்த கட்டடம் உரிமையாளர்களாக இருக்கும் மூன்று குடும்பங்கள் வசிப்பதால் சொத்து பிரச்சினை காரணமாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று தொடங்கி பெய்த கனமழை காரணமாக, வீட்டின் முன் பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்தது.
சம்பவத்தின்போது வீட்டில் வசித்தவர்கள் பின்புற வாயில் வழியாக வெளியேறி காயமின்றி உயிர் தப்பினர். வீட்டின் இடிபாடுகள் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பார்வையாளர்களின் மனதை பதைபதைக்க வைத்துள்ளன.
இவ்வாறான பழமையான கட்டடங்களை சீர் செய்ய அல்லது இடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.