உத்தர பிரதேசத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு சா்க்கரை ஆலையை சேதப்படுத்திய வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ காசிராம் திவாகா் உள்பட 6 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து எம்.பி மற்றும் எல்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் நேற்று (ஜுன் 20) உத்தரவிட்டது.கடந்த 2012, ஜனவரி 16-ஆம் தேதி ஷாஹாபாதில் உள்ள ராணா சா்க்கரை ஆலை வளாகத்திலிருந்து டிராக்டரை வெளியே எடுக்கும்போது ஏற்பட்ட மோதலில் எம்எல்ஏ திவாகருடன் வந்த சில நபா்கள் ஆலையை சேதப்படுத்தினா். அதில், ஆலையின் ஊழியா்கள் சிலா் படுகாயமடைந்ததாக அதன் உரிமையாளா் ஓம்வீா் ஷாஹாபாத் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, திவாகா் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை எம்.பி மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஜய குமாா் விசாரித்தாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட அவா், திவாகா், கிருஷ்ணாபால், பரத், சஞ்சு யாதவ் உள்பட 6 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டாா். மேலும், குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1.01 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் அவா் உத்தரவிட்டாா்.இந்த வழக்கில் சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் 21 போ் விடுவிக்கப்பட்டனா்.