தமிழக அரசின் தீர்மானப்படி, பல்வேறு கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்து தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அப்பாத்துரை, எசனைக்கோரை புதுக்குடி, தாளக்குடி, மாடக்குடி ஆகிய ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டம் மற்றும் கீழவாளாடி ஊராட்சியை லால்குடி நகராட்சியுடன் இணைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பாத்துரை ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென பசுமாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலை திட்டம் கைவிடப்படும், வீட்டு வரி, குப்பை வரி, குடிநீர் வரி போன்றவை செலுத்த வேண்டி கிராம மக்கள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என அவர்கள் வலியுறுத்தினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் போலீசார் மற்றும் லால்குடி தாசில்தார், போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் செல்வதாக உறுதியளித்தனர். இதனால் மறியலில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அதேபோல், கீழவாளாடி ஊராட்சியை லால்குடி நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல்கள் காரணமாக லால்குடி-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.