Wednesday, February 5

பொன்மலை ‘ஜி’ கார்னர் சாலை விபத்து: துரை வைகோ உடனடி தீர்வு

திருச்சி:சென்னை-திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி பொன்மலை ‘ஜி’ கார்னர் பகுதியில், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த சாலையை 15க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தினந்தோறும் பயன்படுத்துகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த சாலைக்கு உரிய தீர்வு இல்லை. இதுகுறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவிடம் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். அதன்பின்னர், துரை வைகோ, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் திட்டஇயக்குனர் பிரவீன் குமார் உட்பட அதிகாரிகள் இந்த பிரச்சினையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“பொன்மலை ‘ஜி’ கார்னர் சாலை பிரச்னை குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்தேன். ரயில்வே நிர்வாகம் நிலம் வழங்கத் தயார் என தெரிவித்துள்ளனர். நிதி குறைபாடு வராது என்று நான் நம்புகிறேன். விரைவில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்.இந்த பணிக்காக, இரண்டு துறை அதிகாரிகளுக்கும், அவர்களது அமைச்சர்களுக்கும் நான் ஏவலாளனாக பணியாற்ற தயார்.”

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் பட்டியலின நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சிபிஐ விசாரணை செய்ய வேண்டுமென கேட்டுள்ளன. துரை வைகோ இதனை குறித்தும், “உரிய விசாரணை இல்லாமல், ஆதாரமில்லாமல் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாது. தவறான நடவடிக்கைகள் இருந்தால், அது தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும்,” என கூறினார்.

மேலும், “வேங்கை வயலுக்கு விஜய் வருவதாக இருந்ததால் வழக்கு அவசரமாக முடிக்கப்பட்டதா?” என்ற கேள்விக்கு, “அது முழுக்க முழுக்க தவறு. உரிய வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களின்பேரில் தான் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது,” என அவர் தெரிவித்தார்.

இவரது பேட்டியின் கடைசியில், “சீமான் பற்றி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மகன் அளித்த பேட்டி குறித்து கேட்டதற்கு,” “நான் அந்த விவகாரத்தில் ஈடுபட விரும்பவில்லை. நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளன, அவற்றைத் தீர்ப்பது முக்கியம்,” என்று துரை வைகோ பதிலளித்தார்.

இதையும் படிக்க  கிராம இணைப்புக்கு எதிர்ப்பு - 28ம் தேதி முற்றுகை போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *