திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்ட சிறையில் இருந்து விசாரணை கைதி ஒருவர் தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்த சூர்யா (25) என்பவர், நல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்ட சிறையில் விசாரணை கைதியாக இருந்த அவர், நேற்று அதிகாரிகள் கைதிகளின் விவரங்களை சரிபார்க்கும்போது காணாமல் போனது தெரியவந்தது.
சிறை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சூர்யா சிறையிலிருந்து தப்பியதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதுகுறித்து சிறைச்சாலை அதிகாரிகள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர்.
சூர்யா பச்சை நிற முழுக்கை டி-ஷர்ட் மற்றும் வெள்ளை நிற லுங்கி அணிந்திருந்தார். மேலும், வலது காலில் எலும்பு முறிவு காரணமாக பிளேட் வைத்துள்ளார், இதனால் நொண்டி நடந்து செல்லும் நிலையில் இருந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சூர்யாவின் உருவப் படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நகரமெங்கும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்து போலீசாரும் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கோவை மத்திய சிறை அதிகாரிகள், திருப்பூர் சிறைச்சாலைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை கைதி சிறையிலிருந்து தப்பியது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.