
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் தலைவர் ஈசுவரன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் நேற்று (திங்கள்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும், மாநிலம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றை சாளர (Single Window System) முறை கொண்டு வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. CBSE மற்றும் ICSE பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் ஒரே இணையதள பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும், பள்ளிகளில் கல்விக்கட்டண சீர்மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்க தலைவர் ஈசுவரன், “2009ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கட்டாய கல்வி சட்டம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வந்தது. அந்தச் சட்டத்தின் மூலம் அமைச்சர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளும் கல்வி பெற்று வந்தனர். ஆனால் இந்நிலையில் தமிழக அரசு அந்த திட்டத்தை இந்த ஆண்டு செயலிழக்கச் செய்துள்ளது,” என குற்றம் சாட்டினார்.
மேலும், “ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இந்தக் கல்வித் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த நிலைமை கவலைக்குரியது. தமிழக அரசு உடனடியாக அறிவிப்பை வெளியிட வேண்டும்,” எனக் கூறினார்.
உயர்கல்வியில் ஒற்றைச் சாளர முறையை உடனடியாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் செயலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போது நடந்த ஆர்ப்பாட்டம் ஒரு முதற்கட்ட நடவடிக்கையாகும் என்றும் கூறினார்.
“தமிழக அரசு பதிலை வழங்கத் தவறினால், கோவையில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். அதற்குப் பிறகும் பதில் இல்லையெனில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்களின் கொடும்பாவியை எரிக்கப்படும்,” எனக் கூறினார்.