பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வணிக மற்றும் குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக கடைவீதி, மார்க்கெட் ரோடு, மரப்பேட்டை, காந்தி சிலை, கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காந்தி மார்க்கெட் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்றும் போது, அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “ஆக்கிரமிப்புகளை அகற்றினால் அனைத்தையும் சமமாக அகற்ற வேண்டும்; ஒருதலைப்பட்சமாக செயல்பட கூடாது” என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.