பொள்ளாச்சி: ஜனவரி 15
தமிழர் திருநாளான பொங்கலை நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். இதில், தமிழகத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நகர திமுக சார்பில், நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஏற்பாட்டில் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சர்க்கஸ் மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில், பொள்ளாச்சி நகரப் பகுதியில் உள்ள 36 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள், கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமிய சமூகம் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் புது பானையில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறையில் கொண்டாடினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, நகர மன்ற தலைவர் சியாமளா மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் இந்த விழாவை தொடங்கி வைத்தனர்.
மேலும், விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட கோலப்போட்டி, வழுக்குமரம் ஏறுதல், உரியடி, கயிறு இழுத்தல், சிலம்பாட்டம், ஆட்டுக்கிடாய் சண்டை, இசை நாற்காலி போன்ற தமிழன் வீர விளையாட்டுகள் நடைபெற்றன.
இந்த விழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, வெற்றி பெற்றவர்கள் பரிசுத்தொகைகள் மற்றும் கோப்பைகள் பெறினர்.
பொள்ளாச்சி நகரப் பகுதியில், முதன்முறையாக அனைத்து தரப்பினரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து கொண்டாடிய இந்த சமத்துவ பொங்கல் விழா மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.