பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரம் ஊராட்சி சோமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகுவாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரம் ஊராட்சி சோமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயப்பன் சுவாமி கோவிலில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. ஐயப்ப சேவா சங்கத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் ஆகம சிற்ப சாஸ்திரப்படி, கர்ப்பகிரகம், மகா மண்டபம், விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி ஆகியவை உள்ளன.
கும்பாபிஷேக விழா கடந்த இரண்டு நாட்களாக வேத மந்திரங்கள் மற்றும் நான்கு கால வேள்விகளுடன் தொடங்கி, கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு நடைபெற்றது. இந்த விழாவில் நாடி சந்தானம், யாத்திரை தானம், கடம் புறப்பாடு ஆகியவை இடம்பெற்றன.
கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்ட பிறகு, அந்த நீரை பொதுமக்களுக்கு தெளித்து, சுமார் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர், காளியாபுரம், சேத்துமடை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.