பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 75 அடி உயரமான கொடி மரம் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மாசாணி அம்மன் கோவிலின் குண்டம் திருவிழா 18 நாட்கள் நடைபெறுகிறது. இதில் முக்கியமான நிகழ்வு, மயான பூஜை, வரும் 12ம் தேதி அருகிலுள்ள மயானத்தில் நடைபெறும். அதன் பிறகு, 13ம் தேதி இரவு குண்டம் பூ வளர்க்கப்பட்டு, 14ம் தேதி காலை 7 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்வு கண்டு கொள்ளப்படும்.
இந்த திருவிழாவை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை அன்று, 75 அடி உயரமான கொடி மரம் சர்க்கார்பதிவிலிருந்து மாசாணி அம்மன் முறைதாரர்கள் மூலம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், இன்று காலை உப்பாறு கரையோரம் பூஜைகள் செய்யப்பட்டு, முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொடி மரம் மாசாணி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் “மாசாணி தாயே போற்றி” என்ற ஒப்பணியில் மேள தாளங்களின் முழக்கத்தில் கொடி மரம் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், முன்னாள் பேருராட்சி மன்ற தலைவர் சாந்தலிங்க குமார், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா, நவநீத கிருஷ்ணன் மற்றும் கோவில் முறைதாரர்கள் மனோகரன், கிரிஷ்ணன், ஆனைமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீமதி, காவல் ஆய்வாளர் தாமோதரன், மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மீனா பிரியா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.