கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க லேசர் மீட்டர் மூலம் அளவீடு பணிகள் நடைபெறுகின்றன. 17 கோடி 10 லட்ச ரூபாய் செலவில் 914 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. 5 கிலோமீட்டர் சுற்றளவுள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு தேவையான மண் பரிசோதனை பணிகளும் நடத்தப்படுகின்றன.
7ம் கட்ட அகழாய்வு பணிகளுக்குப் பிறகு, அந்த இடம் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. இதில் 8 குழிகள் தோண்டப்பட்டு, மீன் உருவம் கொண்ட உறைகிணறு, சிவப்பு நிற பானை போன்ற பொருட்கள் கண்டறியப்பட்டன. 20 மீட்டர் நீளமும் அகலமும் கொண்ட இந்த பகுதி அருங்காட்சியகமாக உருவாகியுள்ளது.
மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறைகள் நடத்திய அகழாய்வு இடங்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதில் ஆறாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட உலைகலன், 32 அடுக்குகள் கொண்ட மிகப்பெரிய உறைகிணறு, சுருள் வடிவ குழாய் போன்றவையும் முக்கியமாக காட்சிப்படுத்தப்படவுள்ளது.