பொள்ளாச்சியில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜோதி நகர் விவேகானந்தா கலை நற்பணி மன்றம், திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை, மற்றும் ஆர்ஷ வித்யா பீடம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இளம் தலைமுறைக்கு நவராத்திரி விழாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 10 நாட்கள் பெருவிழா நடத்தப்படுகிறது.
இந்த விழா கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில், தினமும் ஆதீனங்களின் சொற்பொழிவுகள், ஆன்மீக பட்டிமன்றங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் முடிவுநாள், அக்டோபர் 12ஆம் தேதி, அம்பாள் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்காக 30 அடி உயரத்தில் மகிஷாசூரன் சிலை உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மகிஷாசூரன் சிலையை தத்ரூபமாக வடிவமைப்பதற்காக ஓவியர் இளங்கோ மகிஷாசூரனை ஓவியமாக வரைந்து வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: “அரசியல் தலைவர்களின் படங்களை வரையுவது எளிதானது. ஆனால், நாமே கற்பனை செய்ய வேண்டிய தெய்வங்களை அல்லது கதாப்பாத்திரங்களை வடிவமைப்பது சிரமமானது. மகிஷாசூரனை இந்த தோற்றத்தில் வரைவது கடினமாக இருந்தாலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. மக்கள் இந்த சிலையைப் பார்த்து கொண்டாடும்போது எனக்கு பெருமையும் திருப்தியும் கிடைக்கும்,” என்றார்.