
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, இந்தியா எந்நேரமும் பதில்தாக்குதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தானை ஒட்டிய எல்லையோர மாநிலங்களில் எந்தவொரு அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, வரும் மே 7ஆம் தேதி (புதன்கிழமை) நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது.
இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, வான்வழித் தாக்குதல் ஏற்பட்டால் பொதுமக்களை எச்சரிக்கவும், அவர்கள் தக்க இடங்களில் பாதுகாப்பாக செல்கின்றனர் என்பதை உறுதி செய்யவும், சைரன் ஒலி, அறிவிப்பு ஒலிபெருக்கிகள் போன்றவை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில், கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை, மணலி பெட்ரோலிய தொழிற்சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறவுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் முக்கிய அதிகாரிகளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.