வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடர்கிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் பாலங்களின் அருகில் சீறிப்பாய்ந்தது. மேலும், அருவி அருகே உள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை காரணமாக தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு தொடரும் மழை பாதிப்பு மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றாலம் மலையிலிருந்து வெள்ளத்தில் மூழ்கி மூன்று வயது குட்டி யானை உயிரிழந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு, பலரிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1992 ஆம் ஆண்டு குற்றாலத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில், தற்போது 2024ம் ஆண்டு பெருவெள்ளம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அருவி பகுதிகளில் வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.