
சென்னை: தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான மின்கட்டணத்தை அரசே நேரடியாகச் செலுத்தும் முறை மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மின்கட்டணம் சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மின்கட்டணத்தை அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்களே செலுத்தி வருகின்றனர். இதற்காக, ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படும் சில்லறை செலவுகளுக்கான நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மின் கட்டண செலவில் சிக்கல்:
தற்போது, உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் போன்றவற்றின் அறிமுகத்தால் மின் கட்டணம் பெரிதளவில் அதிகரித்துள்ளது. ஆனால், சில்லறை செலவுகளுக்கான நிதி சரிவர கிடைக்காத காரணத்தால், பல தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்திலேயே மின்கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.
அமைச்சரின் அறிவிப்பு:
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின்கட்டண செலுத்தும் முறையை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் நீட்டிக்க கோரிக்கை விடுத்தது. இதன் அடிப்படையில், முதற்கட்டமாக தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் மின்கட்டணம் நேரடியாக செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மே 1ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மின்கட்டணத்தை அரசே நேரடியாக மின்வாரியத்தில் செலுத்தும் முறை நடைமுறைக்கு வருகிறது.
தலைமையாசிரியர்கள் சங்கத்தின் வரவேற்பு:
தமிழக அரசின் இந்த முடிவை தலைமையாசிரியர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. மேலும், தலைமையாசிரியர்கள் தனிப்பட்ட முறையில் செலுத்திய மின்கட்டண தொகையை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.