கோவையில் நடைபெற்ற பருத்தி தினம் 2024 நிகழ்ச்சியில் ஜவுளித்துறையின் சிறப்பான வளர்ச்சிக்கான நவீன முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும் புதிய தர அளவீட்டு கருவியையும் காட்டன் யுஎஸ் அறிமுகம் செய்தது.
சர்வதேச பருத்தி கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் கவனம் செலுத்துதல், உலகளாவிய பருத்தி உற்பத்தியில் அமெரிக்க பருத்தி மற்றும் இந்திய ஜவுளித் துறையின் பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இதில் தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வெற்றியை ஊக்குவிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை குறித்தும் முக்கிய விவாதங்கள் இடம்பெற்றன.
காட்டன் யுஎஸ்ஏ-ன் தெற்காசியாவிற்கான விநியோகப் பிரிவு இயக்குனர் வில்லியம் பெட்டன்டோர்ப், யு.எஸ். காட்டன் அறக்கட்டளை நெறிமுறை திட்டத்தின் வெற்றி குறித்து பேசினார். அப்போது, அறக்கட்டளை நெறிமுறையின் அதிவேக வளர்ச்சியானது வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மையைக் காட்டுகிறது. இவை விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்திய ஜவுளி ஆலைகளுக்கும், இது சார்ந்த நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகளையும் வழங்கும் என்று பேசினார்.
சுபிமா தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் லெவ்கோவிட்ஸ் பேசுகையில், ஜவுளித் தொழிலில் சுபிமா சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது. சுபிமா பருத்தியின் பிரீமியம் தரம், எங்களின் புதுமையான AQRe திட்ட தளத்துடன் இணைந்து, இந்திய உற்பத்தியாளர்கள் சர்வதேச தேவைகளை அறிந்து அவற்றை துல்லியமாக, பொறுப்புடன் மற்றும் நம்பகத்தன்மையுடன் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த கூட்டாண்மை ஒரு நிலையான மற்றும் சிறப்பான ஜவுளி தொழிலுக்கான எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது என்று பேசினார்.
மேலும் நீளமான இழைகள் கொண்ட பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கப்பட்டதன் தாக்கம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக உயர்தர யு.எஸ். பிமா பைபரை இந்திய ஆலைகள் எளிதில் வாங்குவதோடு, உலக அளவில் போட்டித்தன்மை நிறைந்த ஜவுளித்துறையில் மேம்பட்ட தயாரிப்புகளை அவர்களால் வழங்க முடிகிறது. மேலும் இந்தியாவில் அதிகரித்து வரும் யு.எஸ். பிமா பருத்தி தேவைகள் குறித்தும் நிபுணர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
ஜவுளித் துறையில் இந்தியாவின் முக்கிய பங்கை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய சர்வதேச பருத்தி கவுன்சில் பிரதிநிதி பீஷ் நரங் கூறுகையில், இந்தியாவின் ஜவுளித் தொழில் புதுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது, இது உலகளாவிய பருத்தி வர்த்தகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளது என்றும், உலகளாவிய சந்தைகளின் வளர்ந்து வரும்
தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலையான நடைமுறைகளை வளர்ப்பதில் அமெரிக்கா – இந்தியா இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். மேலும் அவர் யு.எஸ். அப்லேண்ட் பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார், இதன் காரணமாக இந்திய நூற்பு ஆலைகள், அமெரிக்காவிலிருந்து உயர்தர நார்ச்சத்து நிறைந்த பருத்தியை பெறுவதோடு, இது இந்தியாவின் ஜவுளித் தொழிலின் போட்டித்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் ஆலை உற்பத்தித்திறனைக் கண்காணிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு நேரடி கண்காணிப்பிற்கான மில் செயல்திறன் இன்டெக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. கூடுதலாக, யு.எஸ். பருத்தித் தொழில், டெக்ஸ்டைல் ஜெனிசிஸ் மற்றும் ஓரிடெய்ன் ஆகியவற்றின் நுண்ணறிவு உட்பட, கண்டுபிடிப்பின் முன்னேற்றங்கள், தொழில்நுட்பம் ஆகியவை எவ்வாறு வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை உருவாக்குகிறது என்பதையும் தெளிவாக எடுத்துக்கூறின.
சில்லறை விற்பனை மற்றும் நூற்பு ஆலைகளின் எதிர்காலம் பற்றிய பல்வேறு விஷயங்கள் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. மேலும் இந்திய ஜவுளி சில்லறை விற்பனை குறித்த கண்ணோட்டம் மற்றும் பேஷன் சில்லறை வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வளர்ந்து வரும் போக்குகள் பற்றிய விரிவான விவாதம் உட்பட, நுண்ணறிவு சார்ந்த அமர்வுகளும் இடம்பெற்றன. சில்லறை விற்பனை எவ்வாறு உருவாகிறது மற்றும் இந்தியாவில் பேஷன் சில்லறை விற்பனையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய காரணிகள் குறித்தும் தொழில் வல்லுனர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.