கோவை மாவட்டம், பூண்டி, செம்மேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலுக்கு செல்லும் மலை ஏற்றப் பாதைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 10 வயதிற்கும் மேற்பட்ட மற்றும் 60 வயதிற்குள்ள ஆண்கள் மட்டுமே கிரிமலை சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள். உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா, மூச்சு திணறல் மற்றும் வலிப்பு நோய் உள்ளவர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது பக்தர்களின் உடல் நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டுள்ள தீர்மானம்.
அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், இந்த மலை ஏற்றம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மட்டுமே நடைபெறும். மலை ஏறுவதற்கு எந்தவொரு கட்டணமும் இல்லை என்றும் கோவை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் சன்னிதியில், மலை ஏற்றப் பாதையை வனத்துறை அதிகாரி சுசீந்திரன் திறந்து வைத்தார். அதன் பிறகு, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முழக்கங்களை எழுப்பி மலைக்குச் சென்று ஆனந்தமாகப் பயணம் செய்தனர்.