தீபாவளி தினத்தில் காலை 6 முதல் 7 மணி மற்றும் இரவு 7 முதல் 8 மணி ஆகிய நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன. இதற்கு இணையாக, இந்த ஆண்டு தீபாவளிக்கான அறிவுறுத்தல்களையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ளது.
அதன்படி, தீபாவளி தினத்தில் காலை 6 முதல் 7 மணி மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. பாதுகாப்பான மற்றும் சுத்தமான தீபாவளி கொண்டாட்டத்துக்காக, குறைந்த ஒலி மற்றும் குறைந்த மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், திறந்த வெளிகளில் பொதுமக்கள் கூட்டாக பட்டாசு வெடிக்க நலச்சங்கங்கள் மூலம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மேலும், அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளை தவிர்க்கவும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், மற்றும் அமைதியான இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். தீவிர தீப்பற்ற வைக்கும் இடங்கள் மற்றும் குடிசை பகுதிகளுக்கு அருகில் பட்டாசு வெடிக்க கூடாது என்ற அறிவுறுத்தலையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.