தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், இலஞ்சி பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் சூரிய பிரதிஷ், தனது கோரிக்கையை மனுவாக அளித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சூரிய பிரதிஷ், தனியார் பள்ளியில் கல்வி கற்றுவரும் இளம் மாணவன். தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்காக இலஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட 13 மற்றும் 14வது வார்டுகளில் உள்ள சிறுவர் பூங்காக்களை அண்மையில் சென்றபோது, அந்த பூங்காக்கள் பல மாதங்களாக பூட்டிய நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.
அதுகுறித்து, பேரூராட்சி உதவி இயக்குனரிடம் முன்பு கோரிக்கை வைத்திருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அவர் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க முடிவு செய்தார்.
மனுவில், மீனாட்சி நகர் மற்றும் வேலன் நகரில் அமைந்துள்ள இரண்டு சிறுவர் பூங்காக்களையும் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும், தானும் தனது நண்பர்களும் விடுமுறை நாட்களில் அந்த பூங்காக்களில் விளையாட ஆவலுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தனது பள்ளியில் செய்திகள் வாசிப்பதன் மூலம் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிப்பதன் முக்கியத்துவத்தை அறிந்ததாகவும், அதனால் இந்த முயற்சியை எடுத்ததாக சூரிய பிரதிஷ் தெரிவித்தார்.
இளம் மாணவனின் இந்த மனு, சிறுவர் உரிமைகள் மற்றும் பொது வசதிகளின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது. மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பாரா என்பதை எதிர்பார்த்து அந்த பகுதி மக்கள் உள்ளனர்.