கோவை: மலையாள மக்களின் முக்கியமான பண்டிகையான ஓணம் கோவையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவையில் உள்ள போச்சே புட் எக்ஸ்பிரஸ் ஓட்டலில் “போச்சே ஓணம் விருந்து” என்ற சிறப்பு உணவு திருவிழா நடைபெற்றது.
இந்த விருந்தின் சிறப்பு அம்சமாக 22 வகையான பாரம்பரிய ஓணம் சத்யா உணவுகள் பரிமாறப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய உடை அணிந்து உணவுகளை முழுமையாகச் சாப்பிட்டவர்களுக்கு தங்க நாணய பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 200க்கும் மேற்பட்டோர் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.
விருந்து மதியம் 12:30 மணியளவில் துவங்கியது, இதில் முன்பதிவு செய்த அனைவரும் கலந்து கொண்டு 22 வகையான உணவுகளை சுவைத்தனர். குறைந்த நேரத்தில் 22 வகையான உணவுகளை முடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயத்தை டினோ – எஸ்தர் ஜோடி பெற்றது, இரண்டாம் பரிசாக 2 கிராம் தங்க நாணயத்தை வினித் ஜோடி பெற்றது.
மேலும், இந்த விருந்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் செல்ஃபிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அதிக பார்வைகள் பெற்ற புகைப்படத்திற்கு 1 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பாதுஷா – நேகா ஜோடிக்கு சிறந்த புகைப்படத்திற்கான பரிசு வழங்கப்பட்டது.
விருந்தின் போது, ஹோட்டல் முழுவதும் ஓணம் பண்டிகைக்கான பூக்கோலம், மாபலி வேடம் அணிந்த மன்னர் மற்றும் பாரம்பரிய உடை அணிந்த ஊழியர்கள் காணப்பட்டனர்.