
புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு சீரார் மற்றும் பிரபல ரவுடி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், ரவுடி சத்யாவை கொலை செய்ய வாலிபர்கள் திட்டமிட்டிருந்ததை அறிந்த அவர், அவர்களை கத்தி முனையில் அழைத்து சென்று தனது சொந்த இடத்தில் வைத்து கொலை செய்தது தெரிய வந்தது.
கடந்த 14 ஆம் தேதி காலை, புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்குத் தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில், இரண்டு வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டும், மற்றொரு வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். தகவல் கிடைத்ததும், பெரியகடை காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டவர்கள் உழவர்கரையைச் சேர்ந்த ரவுடி தெஸ்தானின் மகன் ரஸி, தீடிர் நகரை சேர்ந்த தேவா, மற்றும் மூலகுளம் பகுதியைச் சேர்ந்த ஆதி என அடையாளம் காணப்பட்டனர். உடற்கூறு ஆய்விற்காக அவர்களின் உடல்கள் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
விசாரணையில், கொலைகள் பிரபல ரவுடி சத்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள இடத்தில் நடந்ததாக உறுதி செய்யப்பட்டது. முதலில், போலீசார் சத்யாவின் கூட்டாளிகளான சக்திவேல் மற்றும் சரணை கைது செய்து விசாரணை நடத்தியபோது, மூன்று வாலிபர்களையும் கொலை செய்தது சத்யா கும்பல் தான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேடு பகுதியில் பதுங்கியிருந்த சத்யா கைது செய்யப்பட்டு புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்டார். மேலும், விசாரணையில், முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி விக்கிக்கும் சத்யாவிற்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. இந்த நிலையில், விக்கி, ரஸி, தேவா, மற்றும் ஆதி ஆகியோரை பயன்படுத்தி சத்யாவை கொலை செய்ய திட்டமிட்டதாக தகவல் கிடைத்தது.
கடந்த 13 ஆம் தேதி இரவு, சத்யா தனது மனைவியுடன் கடற்கரை சாலையில் சென்றபோது, மூவரும் அவரை பின்தொடர்ந்துள்ளனர். இதனை கவனித்த சத்யா, தனது 10 பேர் கொண்ட கும்பலை அழைத்து வந்து, மூவரையும் கத்தி முனையில் பிடித்து கடத்திச் சென்றார். பின்னர், ரெயின்போ நகரில் உள்ள தனது காலி வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவர்களை அடித்து, சித்தரவதை செய்து, வெட்டிக்கொலை செய்தார்.
இதனைத் தொடர்ந்து, சத்யாவின் கூட்டாளிகளான சக்திவேல், சரண், சஞ்சிவி, ரவிந்தரகுமார், காமேஷ், சாரதி, விஷ்ணு, வெங்கடேசன் மற்றும் ஒரு சீரார் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், ஆயுதங்கள், மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாபட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதே நேரத்தில், சத்யாவின் அண்ணன் சங்கர், அவரது கூட்டாளிகள் ஆபிரகாம், விஷ்ணு மற்றும் சிலர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும், சத்யா மற்றும் அவரது அண்ணன் சங்கர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நிலுவையில் உள்ளன.