புதுச்சேரியில் திருவள்ளுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் ஜெ. சரவணகுமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
இதை தொடர்ந்து, திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும், தமிழ் அறிஞர்களும் திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில், சிலைக்கு மாலை அணிவிக்க வந்த முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் விசிக மற்றும் மீனவ அமைப்பினரும் கல்வி வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பி, ஆளும் என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டாட்சி அரசு தமிழ் மொழியை புதிய கல்விக் கொள்கை மூலம் அழித்து வருகின்றதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.