புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரசு செயலர் டாக்டர் முத்தம்மா மற்றும் போக்குவரத்து துறை ஆணையர் டாக்டர் சிவகுமார் விழிப்புணர்வு நடைப்பயணத்தை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் குமரன், செயற்பொறியாளர் சீதாராம ராஜ் அங்காளன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சுமார் 500 கல்லூரி மாணவிகள் பல்வேறு வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்டு எஸ்.வி. பட்டேல் சாலை, மிஷன் வீதி மற்றும் அரசு மருத்துவமனை வழியாக நடைப்பயணம் செய்து மீண்டும் காந்தி சிலை அருகே முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை புதுச்சேரி போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.