வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களுக்கு உடனடியாக முன்னெச்சரிக்கை வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை துணை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். 24 மணி நேரமும் இயங்கும் அவசர அழைப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த அவர், புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பேரிடர் மேலாண்மை, மழை அளவுகள் சேகரிப்பு, வானிலை முன்னெச்சரிக்கை உள்ளிட்ட முறைகளை விவரித்து கேட்டறிந்த அவர், புதிதாக அறிமுகப்படுத்திய ‘டிஎன் அலர்ட்’ செயலி மற்றும் ‘டிஎன்-ஸ்மார்ட்’ இணையதளம் குறித்தும் ஆராய்ந்தார்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கான தேடல், மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், அத்துடன் அனைத்து துறைகளும் முன்கூட்டியே ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் துணை முதல்வர் வலியுறுத்தினார்.
அவர் உடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வருவாய்த்துறை செயலர் பெ. அமுதா மற்றும் பிற உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.