காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு பேசிய பாஜக முக்கிய தலைவர்கள் மீது 11 காவல் நிலையங்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் மக்களவை கூட்டத்தில் ஆற்றிய உரை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை அளித்தது.
இந்நிலையில், பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் ஹெச். ராஜா ராகுல் காந்தியை தேசவிரோதி எனவும், ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு அவரை பயங்கரவாதி எனவும் கூறினர். மகாராஷ்டிராவில் ஏக்நாத் கட்சியை சேர்ந்த சஞ்சய் கெய்க்வாட், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ₹11 லட்சம் பரிசு அறிவித்தார். உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங் ராகுல் காந்தியை நாட்டின் “நம்பர் ஒன் பயங்கரவாதி” என்று கூறினார். மேலும், பாஜக தலைவர் தர்வீந்தர் சிங் மர்வா, “இந்திரா காந்தியைப் போல் ராகுல் காந்தி படுகொலை செய்யப்படுவார்” என மிரட்டல் விடுத்தார்.
இந்த வகையிலான பேச்சுக்கள் ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதன்காரணமாக, பாஜக தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட 11 காவல் நிலையங்களில், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பகவதி மற்றும் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.