Saturday, September 13

வீட்டுமனை வழங்க கோரிக்கை மனு : கோவையில் முதல்வரிடம் வழங்கிய பத்திரிகையாளர்கள் !!!

வீட்டுமனை வழங்க கோரிக்கை மனு : கோவையில் முதல்வரிடம் வழங்கிய பத்திரிகையாளர்கள் !!!

கோவை,  பத்திரிகையாளர்களுக்கு  2 – ம் கட்டமாக சலுகை விலையில் வீட்டு மனை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோயம்புத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக மனு அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்து இருந்தார். கோவையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த முதல்வரை பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக தந்து வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் அனைத்து பத்திரிக்கையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக பத்திரிகையாளர்கள் முதல்வரை நேரில் சந்தித்தனர். அப்போது தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பாக பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனை வழங்கி வரும் நிலையில் கோயம்புத்தூர் பத்திரிகையாளர்களுக்கு 2 ஆம் கட்டமாக வீட்டுமனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் பத்திரிகையாளர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனை வழங்கியதை முதல்வரிடம் ஒருங்கிணைப்பு குழுவினர் நினைவு கூர்ந்தனர்.

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட இந்த தருணத்தில் கோயம்புத்தூர் பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனை வழங்குவது காலத்துக்கும் நினைவு கூறத்தக்கது என தெரிவித்தனர். அவ்வாறு தரப்படும் வீட்டுமனை குடியிருப்பு பகுதிக்கு கலைஞரின் நூற்றாண்டு நினைவாக அவர் பெயரை சூட்ட வேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவித்து உள்ளனர்.

மனுவை பெற்று கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

கடந்த 6 வருடங்களாக சலுகை விலையில் வீட்டுமனையில் எதிர்நோக்கி பல்வேறு நகர்வுகளில் கோயம்புத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு ஈடுபட்டு இருக்கும் நிலையில் தற்பொழுது மாவட்ட நிர்வாகம் நிலம் தேடும் பணியை தீவிரப்படுத்தி இருக்கின்றது.

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோரையும் ஒருங்கிணைப்பு குழு முன்னதாக சந்தித்து இருக்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா உள்ளிட்டோர் நிலம் தேர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்வரையும் கோயம்புத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சந்தித்து மனு அளித்து இருப்பதனால், கோயம்புத்தூரில் பணியாற்றும் இரண்டாம் கட்ட பயனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு விரைவில் சலுகை விலையில் வீட்டுமனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
இதையும் படிக்க  Amazon is offering heavy discounts on these products which you might be interested on buying online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *