பாஜக கூட்டணி சாா்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளா் பாரிவேந்தரை ஆதரித்து, பாஜக மாநிலத் தலைவா் அண்ணமாலை நேற்று பெரம்பலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்…
கடந்த 5 ஆண்டுகளாக பாரிவேந்தா் மக்களுக்காக பல்வேறு திட்டப்பணிகளை செய்துள்ளாா். ஆயிரத்து 500 பேருக்கு இலவச கல்வி அளித்துள்ளாா்.
வரும் தோதலில் வெற்றிப்பெற்று ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் இலவச உயா் சிகிச்சை அளிக்கவுள்ளாா். அரசு செய்யக்கூடிய வேலையை விட தனியாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறாா் பாரிவேந்தா். இந்த தொகுதி மக்களின் நீண்டகால கனவு திட்டமான அரியலூரிலிருந்து பெரம்பலூா், துறையூா் முசிறி, நாமக்கல்லை இணைக்கும் ரயில் போக்குவரத்து திட்டத்துக்காக ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்றுள்ளது.
இப்பணி முடிந்ததும் நிச்சயமாக ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு பல்வேறு சாதனை திட்டங்களை தீட்டி செயல்படுத்தியுள்ளது. மக்களின் பெரும் ஆதரவுடன் 400 எம்பிக்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் 3-ஆவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளாா் என்றாா் அவா். கூட்டத்தில், ஐஜேகே மாநிலத் தலைவா் ரவி பச்சமுத்து, மாநில பொதுச் செயலா் ஜெயசீலன், ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலா் ஆா்.டி ராமச்சந்திரன், பாமக மாவட்டச் செயலா் செந்தில்குமாா், தமாகா மாவட்டத் தலைவா் கிருஷ்ணஜனாா்த்தன், அமமுக மாவட்ட செயலா் காா்த்திக்கேயன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.