இண்டிகோ விமானங்களின் ரத்துகள் மற்றும் தாமதங்களால் பயணிகள் பெரும் அவதியடைந்த நிலையில், முக்கிய வழித்தடங்களில் அதன் சேவைகளை 5% குறைக்க டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளுக்கு சுமார் 115 விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
அதிக தேவையுள்ள மற்றும் அதிக அதிர்வெண் கொண்ட வழித்தடங்களில் இண்டிகோ சேவைகளை குறைக்க தீர்மானித்துள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், திருத்தப்பட்ட அட்டவணையை டிசம்பர் 10 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு இண்டிகோவுக்கு உத்தரவிட்டுள்ளது. புதிய அட்டவணை இண்டிகோவின் தினசரி செயல்பாடுகளை பொருத்தே அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இண்டிகோ சேவை நிறுத்தப்படும் வழித்தடங்களில் மற்ற விமான நிறுவனங்களின் சேவைகள் இயக்கப்படும் எனவும் டிஜிசிஏ தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, உள்நாட்டு சந்தையில் 65% பங்கைக் கொண்டுள்ளது. தினசரி 2,300 விமானங்களில் 2,150 உள்நாட்டு சேவைகள் ஆகும்.
சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய புதிய விமான பணி நேர வரம்பு விதிமுறைகள் காரணமாக, இண்டிகோவில் பணியாளர் பற்றாக்குறை உருவானது. இதன் விளைவாக கடந்த வாரத்தில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்ட்டன. இதனால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
