
உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 21 பேரின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது பணியாற்றி வரும் 33 நீதிபதிகளில் பெரும்பாலானோர் சொத்துவிவரங்களை சமர்ப்பித்துள்ள நிலையில், மற்ற நீதிபதிகளின் விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, நீதிமன்றத்தின் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொலீஜியத்தில் இடம்பெற்ற 5 நீதிபதிகளும் சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளதுடன், பெண் நீதிபதிகளில் பீலா எம். திரிவேதி சொத்து விவரத்தை தெரிவித்துள்ளார். பி.வி. நாகரத்னா இன்னும் விவரம் சமர்ப்பிக்கவில்லை.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13-ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில் இந்த விவரங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக அனைத்து நீதிபதிகளின் சொத்து விவரங்களை பொதுமக்களுக்கு பகிரும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நீதிபதிகளின் சொத்து விவரங்களை பொதுவெளியில் பகிர ஏப்ரல் 1-ம் தேதி முழு நீதிமன்றமும் ஒருமனதாக தீர்மானித்தது. இதன்படி இதுவரை பெறப்பட்ட விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நீதிபதிகளின் விவரங்கள் பெறப்பட்டவுடன் வெளியிடப்படும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படும் முழு நடைமுறைகளும் தற்போது பகிரப்பட்டுள்ளன. இதில் கொலீஜியம் பரிந்துரை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.