பிரெய்ன் ஸ்ட்ரோக் (BRAIN STROKE) எனும் மூளை பக்கவாதம் அறிகுறிகளைப் புரிந்துகொண்டு உடனடி சிகிச்சையைப் பெறவும், உடல் ரீதியாக அதிக விளைவுகளை ஏற்படுத்தும் பக்கவாதம் தாக்குதல் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பிரபல நியூராலஜிஸ்ட் நிபுணர் அசோகன் தெரிவித்துள்ளார்.
பிரெய்ன் ஸ்ட்ரோக் எனும் மூளை பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் ஸ்ட்ரோக் அகாடமி என கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
எம்க்யூர் ஃபார்மா (EMCURE PHARMA) ஒருங்கிணைத்த இந்த கருத்தரங்கில்
இராமகிருஷ்ணா மருத்துவமனையின் நியூராலஜி துறையின் தலைமை மருத்துவ நிபுணர் டாக்டர் அசோகன் தலைமை தாங்கினார். இதில் நியூராலஜிஸ்ட் மருத்துவ நிபுணர்கள் மருத்துவர்கள் பிரகாஷ், பாலகிருஷ்ணன், அருணாதேவி, வேதநாயகம், ரம்யா,ரேடியாலஜி நிபுணர் அருண் ராம்ராஜ் உட்பட மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கின் நோக்கம் குறித்து பிரபல நியூராலஜிஸ்ட் மருத்துவ நிபுணர் அசோகன் கூறுகையில், உலக பக்கவாதம் தினத்தில், மூளை பக்கவாதம் எனும் பிரெய்ன் ஸ்ட்ரோக் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெறுவதாகவும், மூளை பக்கவாதம் அறிகுறிகளைப் புரிந்துகொண்டு உடனடி சிகிச்சையைப் பெற வேண்டும், மேலும் உயிரைக் காப்பாற்றவும் வாழ்நாள் முழுவதும் இயலாமையைத் தடுக்கவும் இந்த பக்கவாதம் தாக்குதல் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மூளைப் பக்கவாதம்’ என்பது நம்மில் பலருக்கு அதிகம் தெரியாத ஒரு நிகழ்வாக நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய், நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் உடல் பருமன், புகைபிடித்தல், உடற்பயிற்சி இன்மை போன்ற காரணங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படும் என தெரிவித்த அவர், மிக முக்கியமாக பக்கவாதத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளான, முகம் ஒரு பக்கம் இழுத்து கொள்வது, ஒரு கை அல்லது கால்கள் பலவீனமாவது, பேச்சு குளறுவது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக தகுந்த மருத்துவரிடம் பரிசோதித்து சிகிச்சை பெறுவது அவசியம் என தெரிவித்தார்.