விழுப்புரம் மாவட்டம் பெரம்பை கிராமத்தில் போகி பண்டிகையை கொண்டாடும் வகையில், பழைய பொருட்களை எரித்து புதியவற்றை வரவேற்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல், நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதன் முதல் நாளாக போகி பண்டிகை கொண்டாடப்படும். மார்கழி மாதத்தின் நிறைவுநாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்பதே போகி பண்டிகையின் நோக்கமாகும். இந்த நாளில், வீடுகளின் முன்பு தீ வைத்து தேவையற்ற பொருட்கள் மற்றும் பழைய ஆடைகளை எரிக்கின்றனர். பெண்கள் மந்திரங்கள் சொல்லி, பாடல்கள் பாடி அந்த தீயை சுற்றி வழிபடுகின்றனர். நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்றிணைந்து இந்த நாளை கொண்டாடுகின்றனர். புதிதாக விளைந்த அரிசி, பழங்கள் மற்றும் விளைச்சல் மூலம் கிடைத்த பணம் ஆகியவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து, போகி பண்டிகையை கொண்டாடுவது சில இடங்களில் வழக்காக உள்ளது.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்கு உட்பட்ட பெரம்பை மற்றும் பிற பகுதிகளில், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் வீட்டின் முன்பு பழைய பொருட்களை எரித்து, போகியை வரவேற்றனர்.