திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் 56 வயதான யானை காந்திமதி, உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தது.
1985 ஆம் ஆண்டு நன்கொடையாளர்களின் மூலம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட காந்திமதி, பல ஆண்டுகளாக கோவிலின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று பக்தர்களிடம் பெரும் மதிப்பை பெற்றிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மூட்டு வலி உள்ளிட்ட உடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த காந்திமதி, கடந்த மாதத்தில் மூட்டு வலி அதிகரித்ததால் காயல்பட்டினம் கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கினர்.
கடந்த சில நாட்களாக படுக்க முடியாமல் நின்ற நிலையில், நேற்று அதிகாலை யானை முதன்முறையாக படுத்து தூங்கியது. ஆனால் அதன்பின் எழ முடியாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தது.
யானையின் நிலையை மேம்படுத்த கோவில் நிர்வாகம் இரு கிரேன்கள் மூலம் அதை எழுப்ப முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் காந்திமதி உயிரிழந்த செய்தி பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் யானையின் இறுதிச் சடங்கு நடைபெறும் வரை கோவிலின் நடை அடைக்கப்படும் என்றும், பரிகார பூஜைகள் முடிந்தபின் நடை திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் இன்று காலை 11 மணி முதல் பக்தர்கள் யானைக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.