ராமநாதபுரம் மாவட்டம் திருவாடணை அருகே ஆண்டாஊருணியைச் சேர்ந்த காளியம்மாள் (45) என்ற பெண், கர்ப்பப்பை பிரச்சினைக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்திருந்தார். சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிய அவர், தொடர்ந்து வயிற்றுவலியால் அவதிப்பட்டார்.
மீண்டும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, வலி சில வாரங்களில் குறையும் என கூறியதாக தெரிகிறது. ஆனால் வலி அதிகரித்து, ராமநாதபுரம் திருவாடனை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தபோது, வயிற்றில் பஞ்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.
இந்த விஷயத்தில், காளியம்மாளின் மகன் சுந்தர்ராமன், சிகிச்சையின் போது கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.