பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில், மருத்தவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும் கழிவறையில் ரகசியமாக பேனா வடிவிலான கேமரா வைத்து வீடியோ பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையின் கழிவறையில், நவம்பர் 28ஆம் தேதி, பெண் செவிலியர் ஒருவர் இந்த கேமராவைக் கண்டபோது, அதிர்ச்சியடைந்து இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜாவிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, கண்காணிப்பாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் (33) இந்த கேமராவை அமைத்ததன் பின்னணி தெரியவந்தது.
மருத்துவமனையில் நவம்பர் 16ஆம் தேதி முதல் பணிபுரிந்து வந்த வெங்கடேஷ், கோவை மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ். ஆர்தோபீடிக்ஸ் மூன்றாம் ஆண்டு மாணவராக இருந்தார். ஆன்லைன் வழியாக பேனா வடிவிலான கேமராவை வாங்கி, கழிவறையில் பொருத்தி வீடியோ பதிவு செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதன் பேரில், கண்காணிப்பாளர் ராஜாவின் புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, வெங்கடேஷை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வெங்கடேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.