இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இந்த மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (27-11-2024) புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக மாறும் இந்த மண்டலம் அடுத்த இரு தினங்களில் இலங்கை மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும் என கணிக்கப்படுகிறது.
புயலுக்கு ‘ஃபெங்கல்’ என பெயர் சூட்டப்படுகிறது:
வங்கக்கடலில் உருவாகும் இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ‘ஃபெங்கல்’ என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் டிசம்பர் 2 வரை பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக,
ஆரஞ்சு நிற எச்சரிக்கை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மற்றும் நாளை மறுநாளும் மிக கன மழை ஏற்படக்கூடும்.
ரெட் அலர்ட்:
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் புயல் எச்சரிக்கையை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மீனவர்கள் வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலோர பகுதிகளில் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.
மக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.