கோவையில் இன்று அதிகாலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருப்பதாலும், கேரள எல்லையில் இருப்பதாலும் கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தான் கோவையை குளுகுளு நகரம் என்றும் அழைப்பது உண்டு. அதன்படி ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களில் தென்மேற்கு பருவ மழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவமழை, ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் குளிர்கால மழை, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை கால மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்ய தொடங்கி விட்டது. இன்னும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கோவையில் அதிகாலையில் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் காலை பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றதை காண முடிந்தது.