தி.மு.க செயற்குழுக் கூட்டம் இன்று (22.12.2024) காலை 10 மணி அளவில் சென்னை கலைஞர் அரங்கில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவதூறாக பேசியதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் சட்டத்தின் தந்தை அம்பேத்கர் அவர்களின் தியாகத்தை அவதூறாக பேசி, அவரை தரம் தாழ்த்திய அமித் ஷாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த தி.மு.க, இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்ட தலைகுனிவு என்று சாடியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கெதிராக மாநிலமெங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதை செயற்குழு பாராட்டியது. மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் கண்டன குரல் எழுப்பியதற்கும் பாராட்டு தெரிவித்துள்ளது.
இத்தகைய அரசியலை நாடாளுமன்றத்தின் திருக்கோவிலில் அரங்கேற்றிய அமித் ஷாவின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் மீதான அநாகரீக தாக்குதலாக தி.மு.க குற்றம் சாட்டியுள்ளது.