மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை பாதுகாக்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்பு நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் கே.ஏ. பட்டீஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட பயனாளிகளுக்கு நிலுவையில் உள்ள இரண்டரை மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்,மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் 100 நாட்கள் வேலை அளவு 200 நாட்களாக உயர்த்த வேண்டும், ஒவ்வொரு பயனாளிக்கும் 600 ரூபாய் தின ஊதியம் வழங்க வேண்டும்,மத்திய அரசின் 2025-2026 பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்கான ரூபாய் 2,20,000 கோடி ஒதுக்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்,நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை முறையாகவும் தொடர்ச்சியாகவும் அமல்படுத்த வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட பொருளாளர் கே.மகாலிங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ச.ஜெகநாதன், சிஐடியு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர். சரவணன், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி மண்டல செயலாளர் பத்மநாபன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஸ்டாலின் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துப் பேசினர்.