இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், முதற்கட்டமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் இரு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மதியத்தில், அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் சிறிய ஓய்விற்கு பின், காரைக்குடி தனியார் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட அவர், அந்த வழியில் பொதுமக்களுடன் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று சந்தித்தார்.
அப்போது, பலரும் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவருக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. அவ்வழி நெடுகிலும் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் மற்றும் சிலம்பம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் சாலைகளின் இரு புறங்களிலும் கூட்டமாக இருந்தனர். “ரோடு ஷோ” நிகழ்ச்சி, அழகப்பா பல்கலைக்கழக ஓய்வு விடுதியில் இருந்து காலேஜ் ரோடு, நீதிமன்றம், ராஜீவ் காந்தி சிலை, தேவர் சிலை வழியாக தனியார் திருமண மண்டபத்தை நோக்கி செல்லும் வழியில் நடந்தது.