கோவை சுங்கம் பகுதியின் கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைரவிழா மிகப்பெரிய தொடர் கொண்டாட்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு பள்ளி முதல்வர் ஆரோக்கிய ததேயுஸ் தலைமையில் நடைபெற்றது.
கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்வினாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளியின் ஆண்டு மலரின் முதல் பதிப்பை வெளியிட்டார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் நந்தகுமார், செயலர் ராஜ்குமார், முதன்மை குரு ஜான் ஜோசப், மறை மாவட்ட பொருளாளர் ஆன்டனி செல்வராஜ் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் பிரான்ஸ் ஜோ, தன்ராஜ் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கும் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
இந்த நிகழ்வு குறித்து, பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குனர் கருப்புசாமி கூறியதாவது, “மாணவர்களை நல்வழிகளில் வளர்த்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மேலும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் நட்புடன் பழக வேண்டும்” என்றார்.
கோவை மறைமாவட்ட பிஷப் தாமஸ் அக்வினாஸ் தனது உரையில், “எங்களுடைய பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் உயரதிகாரிகளாக பணி புரிவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து இந்த வைரவிழாவை கொண்டாடுவதும் எனக்கு பெருமை அளிக்கிறது” என்றார்.
இந்த நிகழ்வில், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் நந்தகுமார், செயலர் ராஜ்குமார், தாளாளர் மற்றும் முதல்வர் ஆரோக்கிய ததேயுஸ், முன்னாள் ஆசிரியர் ஜோ தன்ராஜ், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.