![குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் நிகழும் விபத்துகள்: மக்கள் அவதி குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் நிகழும் விபத்துகள்: மக்கள் அவதி](https://thenewsoutlook.com/wp-content/uploads/2024/12/image_editor_output_image1967968769-1734928160552.jpg)
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, தற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படாததால் தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
கடந்த மாதம் இப்பகுதியில் வாழ்ந்த இளைஞர் ஒருவரின் தலையில் பால்கனியின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது அதே பகுதியில் மூன்றாவது மாடியின் பால்கனி இடிந்து விழுந்ததில், மோகன் (வயது 35) என்பவர் காயமடைந்தார்.
சம்பவத்தை அடுத்து சேதமடைந்த குடியிருப்புகளை ஆய்வு செய்த காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள், சிதிலமடைந்த கட்டிடங்களில் வசித்து வந்த எட்டு குடும்பத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். அவர்கள் தங்களது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள 52 ஆண்டுகள் பழமையான குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கிக் கொண்டார். அவரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பழமையான கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அங்கு வசிப்போர் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். “உடனடியாக புதிய வீடுகளை கட்டி தர வேண்டும் அல்லது சீரமைத்து தர வேண்டும்” என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.