“எளிய பயணிகளுக்கு கட்டண உயர்வின்றி தரமான சேவையை ரயில்வே துறை வழங்கி வருகிறது. விபத்துகளின் விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கையாக செயல்படும் என்று நம்பிக்கை இருக்கிறது” – பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன்.
கோவை வடவள்ளி பகுதியில் தனியார் மழலையர் பள்ளியை திறந்தபின், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல கல்வி நிலையங்கள் திறக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. புதிய திறமைகளை கற்றுக்கொள்ள இயற்கைக்கு ஏற்ப அமைந்த பள்ளிகள் இன்றைய காலத்தின் தேவை என அவர் கூறினார்.
பாஜக-வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் இன்று தொடங்குவதாகவும், நாக்பூரில் விஜயதசமி நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், கிராமங்களில் உள்ள கோவில்கள், நீர்நிலைகள், இடுகாடுகள் போன்ற அனைத்து இடங்களும் அனைத்து மக்களும் பயன்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, காங்கிரஸ் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் நிலையான ஆட்சி வழங்க முடியாது என்ற நிலையை மாற்றியது பாஜக என்பதையும், இதற்கு ஆர்எஸ்எஸ்-ன் ஒற்றுமை சித்தாந்தம் ஆதாரமாக இருந்ததாகவும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.
திருச்சி-சார்ஜா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விவகாரம் குறித்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது நிம்மதி அளிக்கிறது என்றும், இதில் பங்காற்றியவர்களுக்கு நன்றியுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
திருவள்ளூர் கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், ரயில் விபத்துகளைத் தவிர்க்க மத்திய அரசு பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வருகிறது. மேலும், கட்டண உயர்வின்றி தரமான சேவையை தொடரும் ரயில்வே துறை மக்களின் நம்பிக்கைக்கு உரியதாக உள்ளது என்றும் கூறினார்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, மாநில அரசு பணம் செலவழித்தாலும், சரியான முறையில் பருவமழை முன்னெச்சரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.