மேற்கு வங்கத்தின் பராசத் மற்றும் மதுராபூர் மக்களவைத் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியில் மறுவாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது. பராசத் தொகுதியின் வாக்குச்சாவடி தேகங்கா சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கடம்பகாச்சி சாரதார் பாரா எஃப்.பி பள்ளியிலும், மதுராபூர் தொகுதியின் வாக்குசாவடி காகதுவிப் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஆதிர் மஹால் ஸ்ரீசைதன்யா பித்யாபீடத்திலும் அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் மறுவாக்குப்பதிவு நடத்த முடிவு செய்ததாக நேற்று (ஜூன். 2) அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1 அன்று நடைபெற்றது.