சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 5 மாதத்திற்கு பிறகு தக்காளி விலை கிலோ ரூ.60-ஐ எட்டியுள்ளது.சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.இந்த நிலையில், வழக்கமாக தினசரி 1200 டன்னுக்கு தக்காளி வரத்து இருந்த நிலையில், திங்கள்கிழமை 700 டன் மட்டுமே தக்காளி வந்தது. வரத்து குறைவால் தக்காளி விலையும் திடீரென உயா்ந்துள்ளது.இதன்படி, வெள்ளிக்கிழமை வரை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையான தக்காளி திங்கள்கிழமை கிலோ ஒன்று ரூ.60-ஐ எட்டியுள்ளது.இதனால், அடித்தட்டு மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். தக்காளி விலை உயர்வு 10 நாட்கள் வரை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.