நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.“கடந்த 3-ஆம் தேதி திருநெல்வேலி காவல்துறையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. அன்றைய தினம் இரவே 9 மணிக்கே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாருடன் மரண வாக்குமூலம் மற்றும் குடும்பத்துக்காக எழுதிய இரண்டு கடிதங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.மரண வாக்குமூலம் கடிதத்தில் அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், சிலருடன் பணப்பரிவர்த்தை பிரச்னை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தனக்கு மரணம் நேர்ந்தால், அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டவர்களில் யாரேனும் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த நாள் 4-ஆம் தேதி காலை அவரின் சடலம் வீட்டுக்கு பின்புள்ள தோட்டத்தில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சந்தேக மரணம் என்று வழக்கை மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணைக்கு 10 டிஎஸ்பிக்கள் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேரிடமும் விசாரணை நடைபெற்றது. கடிதம் அடிப்படையில் ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக எந்தவித முன்னேற்றமும் காணப்படாத நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.