பொள்ளாச்சி அருகேயுள்ள கிணத்துக்கடவு பகுதியில் கள்ள சந்தையில் மது விற்றவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, 260 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி, கோவில்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான பார் அருகே, விடுமுறை நாளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவராகவும், டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடம் இருந்து 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், முள்ளுப்பாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே மது விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் இருந்து 140 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 260 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ள சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.