“மக்களுக்கும் யானைகளுக்கும் பிரச்சனை வராதவாறு யானை வழித்தடங்களை நிர்ணயிக்கும் பணியில் வனத்துறை செயலில் ஈடுபட்டுள்ளது” – வனத் தியாகிகள் தினத்தில் வனத்துறை அமைச்சர் பேட்டி
கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வன உயிர்பயிற்சியகத்தில் தேசிய வனத் தியாகிகள் தின அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன உயிர்பயிற்சியக அதிகாரிகள் கலந்து கொண்டு, வனத் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: வனத்துறை சார்பில் மதுக்கரைப் பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் யானை நடமாட்டங்களை கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ரயில்வே வழித்தடங்களில் யானைகளின் உயிர் சேதம் ஏற்படாதவாறு, மற்றும் மனித-யானை மோதல் தவிர்க்கப்பட்டு வருவதாகவும், வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
பொதுமக்கள் யானை நடமாட்டம் குறித்து தகவல் அளித்தால், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை எடுத்து, யானைகளை பாதுகாப்பாக விரட்டுவதில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
யானைகள் பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் புகைப்படங்கள் குறித்து எழுத்துணர்வின் அடிப்படையில் அந்த பகுதிகளை சுட்டிக்காட்டி தகவல்களை அனுப்பினால், வனத்துறை அதிகாரிகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வனத்துறைக்கு புதிய உபகரணங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், யானை வழித்தடங்கள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மக்களுக்கும் யானைகளுக்கும் இடையில் பிரச்சனை ஏற்படாதவாறு வழித்தடங்களை நிர்ணயிக்கும் பணிகள் வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
வனப்பகுதிகளில் சட்டமற்ற முறையில் செயல்படும் ரிசார்ட்களை கண்டறிந்தால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.