ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோவில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக பக்தர்களை ஈர்க்கிறது, மேலும் அமாவாசை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாகும். சுற்றுப்புற மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த ஆண்டின் குண்டம் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயான பூஜை 11-ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு, குண்டம் கட்டுதல் 13-ஆம் தேதி, சித்திரத்தேர் வடம் பிடித்தல் மாலை 6 மணிக்கு, குண்டம் பூ வளர்த்தல் இரவு 10 மணிக்கு நடைபெற்றன.

முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை 6 மணிக்கு அம்மன் கலசம் உப்பாற்றில் முத்தரிக்கப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், அம்மன் அருளாளி மேள தாளங்களுடன் குண்டம் இறங்கும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். குண்டம் மாசாணியம்மன் திருமண மண்டபத்தை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

சுமார் 7 மணியளவில் தலைமை பூசாரி சிறப்பு பூஜைகள் நடத்தினார். இதில் கோவில் உதவி ஆணையாளர் கைலாசமூர்த்தி, அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செ.மா. வேலுசாமி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜெயராமன், வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி அதிமுக நகர செயலாளர் வி.கிருஷ்ணகுமார், ஆனைமலை பேரூர் கழக திமுக செயலாளர் டாக்டர் செந்தில் குமார், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, முன்னாள் தலைவர் சாந்தலிங்க குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக வால்பாறை சரக காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியாற்றினர். அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை உருட்டி, பின்னர் தலைமை பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள், பக்தர்கள் குண்டம் இறங்கினர். விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டபடி குண்டம் இறங்கினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கினர். பின்னர், பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுத்தனர்.

குண்டம் இறங்கும் பகுதியில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், நர்சுகள் அவசர தேவைகளுக்காக தயார் நிலையில் இருந்தனர். பக்தர்களின் வசதிக்காக பெரிய திரைகளில் ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குண்டம் திருவிழாவுக்காக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது.

நாளை கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், மகா முனி பூஜை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். 16-ஆம் தேதி மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் குண்டம் விழா நிறைவு பெறுகிறது.

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *