திருச்சி: திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் ஏற்றி வந்த ஜேசிபி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோயம்புத்தூரில் இருந்து திருச்சிக்கு ஜேசிபி எந்திரத்தை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. மதுரையை சேர்ந்த கருப்புசாமி (45) என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.
திருச்சி மாவட்டம் நம்பர் டோல்கேட் ஒய் ரோடு அருகே சாலையை கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக லாரியில் இருந்து ஜேசிபி எந்திரம் கீழே விழுந்து கவிழ்ந்தது. இதனால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, கிரேன் மூலம் ஜேசிபி எந்திரத்தை மீட்டு அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்தை சீரமைத்தனர். நான்கு சாலைகள் சந்திக்கும் சிக்னல் பகுதியில் நடந்த இந்த விபத்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்தை பாதித்தது.